ஏழரைச் சனி என்ன செய்யும்?

உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்.  பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்... எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் போட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்... எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும்.

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக, குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் பிரச்னை பெரிதாகும். தேன்கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும்.

13லிருந்து 19 வயது வரையுள்ள ஏழரை சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்க வேண்டும். ஏட்டறிவு, எழுத்தறிவு, சொல்லறிவு எல்லாவற்றையும் தாண்டிய அனுபவ அறிவை ஏற்றி வைப்பார். தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளையை தடியெடுத்துத் திருத்தும் வாத்தியார்தான் சனி பகவான். ‘‘சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப் போடா’’ என்று அம்மா சொன்னால், ‘‘எங்கயோ இருக்கற சாமிக்கு என் பிரேயர்தான் முக்கியமா?’’ என்பார்கள். ஆனால், சிக்கலில் தவிக்கும்போது தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல், ‘‘சும்மா ஜாலிக்குத்தான் அப்படி பண்ணேன்’’ என்று ஏழரையில் பல வினைகளைக் கொண்டு வருவார்கள்.

ஏழரை சனியில் பெறும் அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும். ‘‘ரெண்டு மார்க் அதிகமா எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும். இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனி பகவான். சரி, இதற்கு என்னதான் செய்வது?

குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட் என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும். அடுத்ததாக இரண்டாவது சுற்று! இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால், கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘ஒண்ணுமே இல்லாத ஓட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார்.

ஏன் இப்படி எடுத்துக் கொள்கிறார்? யாரிடமிருந்து பறித்துக் கொள்வார்?
‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது. எனக்கு மிஞ்சி என்ன இருக்கு’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர், மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே, ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார்.

சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். எதுவும் இல்லாதபோது இருந்த வீரமெல்லாம், எல்லாமும் வந்த பிறகு போய்விடும். ‘‘நாலு பேர் என்ன நினைப்பாங்க’’ என்றே, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் தெரியாமல் ஓரமாக உட்கார்ந்து உள்ளுக்குள் அழ வைப்பார். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட், கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும், கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனா, ‘‘இந்த விஷயத்தைப் போய் நாம எப்படி சொல்றது? என்னை தப்பா நினைச்சிட்டா...’’ என்று தயங்குவீர்கள்.
பிறகு எப்படித்தான் இருக்க வேண்டும்?  

ஏழரை சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல. சனி பகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள். இதற்கு முறையான பரிகாரம் செய்தால் ஓரளவு நம்மை பாதுகாத்துக் கொள்ளனலாம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...